நகராட்சி அலுவலகம் முற்றுகை பா.ஜனதாவினர் போராட்டம்
ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள கமிஷனரை பதவி நீக்கம் செய்யக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களூரு,
உடுப்பி மாவட்ட கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மஞ்சுநாத்தய்யா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுப்பி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகக்கூறி அவரை நகராட்சி கமிஷனர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரை மீண்டும் கல்வித்துறையிலேயே பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரி பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் நகராட்சி கமிஷனர் பதவியில் இருந்து மஞ்சுநாத்தய்யாவை நீக்கக்கோரி கண்டன ஊர்வலத்தில் ஈடுபட்டனர். உடுப்பி டவுனில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், கடியாளி பகுதியில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகம் வரை நடந்தது.
பின்னர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கமிஷனர் மஞ்சுநாத்தய்யா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. எந்த ஒரு ஆவணத்தையோ, சான்றிதழையோ பெற வேண்டும் என்றாலும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த நிலை மாற வேண்டும். அதனால் மந்திரி பிரமோத் மத்வராஜ் உடனடியாக மஞ்சுநாத்தய்யாவை கமிஷனர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த உடுப்பி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜனதாவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் நகரசபை தலைவர் மீனாட்சி மாதவா பன்னாஜே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து பா.ஜனதாவினர், கமிஷனர் மஞ்சுநாத்தய்யாவை பதவி நீக்கம் செய்யக்கோரி, நகரசபை தலைவர் மீனாட்சியிடம் மனு கொடுத்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட மீனாட்சி இதுபற்றி உயர் அதிகாரிகள் மற்றும் மந்திரியிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பா.ஜனதாவினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.