மார்த்தாண்டம் அருகே பிளேடால் கைகளை கீறி வாலிபர் தற்கொலை வீட்டில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்

மார்த்தாண்டம் அருகே பிளேடால் கைகளை கீறி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் வீட்டில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

Update: 2017-10-07 02:00 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் கல்லுகட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பார்கவி. இவர்களுடைய மகன் மணிகண்டன் (வயது 28), தொழிலாளி.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது, அவருக்கு கல்லீரல் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு பல லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. அதற்கு வசதியில்லாததால் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்த மணிகண்டன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்தார். பார்கவியின் தாயார் பாப்சு குழித்துறை காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இதனால் பாகோட்டில் உள்ள அவரது வீட்டின் சாவி பார்கவியிடம் இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்ற மணிகண்டன் இரவு சாப்பிட வரவில்லை. மேலும், பார்கவியின் தாயார் வீட்டு சாவியையும் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த பார்கவி, நேற்று காலை பாகோடில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டிற்குள் மணிகண்டன் ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்ததும் பார்கவி அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டுக்குள் சென்றனர். அங்கு மணிகண்டனின் இரண்டு கைகளிலும் உள்ள நரம்பு பிளேடால் கீறப்பட்டிருந்தது. இதனால், மணிகண்டன் தன்னுடைய கைகளில் பிளேடால் கீறி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனையடுத்து போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்