பிரச்சினைகள் தொடர்பாக என்னோடு ஆலோசிக்க வாருங்கள் அமைச்சர் கந்தசாமிக்கு, கவர்னர் கடிதம்

பிரச்சினைகள் தொடர்பாக என்னோடு ஆலோசிக்க வாருங்கள் என்று அமைச்சர் கந்தசாமிக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம் அனுப்பியுள்ளார்.

Update: 2017-10-06 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி வெகுமதி கூப்பன் வழங்கும் விழாவின்போது பேசிய அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரண்பெடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். நலத்திட்டங்களை நிறைவேற்ற கவர்னர் கையெழுத்திடுவது இல்லை எனவும், திட்டங்களுக்கு முட்டுகட்டையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 2018–ம் ஆண்டுக்கான டைரியில் தனது படம் மற்றும் தான் வகிக்கும் துறைகள் குறித்த விவரங்களை இடம்பெற செய்ய வேண்டாம் என்றும் கூறி முதல்–அமைச்சரிடம் கடிதம் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி டெல்லியில் பாராளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி அமைச்சர் கந்தசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:–

அரசின் கோப்புகள் குறித்து பல்வேறு பிரச்சினைகளை கூறி உள்ளீர்கள். நம்மிடம் குறிப்பிட்ட அளவே நிதியாதாரங்கள் உள்ளன. அதை தேவையானவற்றுக்கு சரியான அளவில் செலவிடுவது அவசியம்.

நீங்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக உங்களுடன் கவர்னர் மாளிகையில் எந்த நேரத்திலும் விவாதிக்க தயாராக உள்ளேன். அப்போது நிதித்துறை செயலாளரையும் அழைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவைப்பட்டால் உங்கள் மகன் விக்னேசையும் அழைத்து வரலாம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். இந்த கடிதத்தின் நகலை முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்