அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை–தர்ணா

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தாமதமின்றி ஊதியம் வழங்க கோரி துணை வேந்தர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-06 23:00 GMT

சிதம்பரம்,

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஊதியமும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் மாத சம்பளத்தை மாதத்தில் கடைசி வேலை நாட்களில் வழங்கிட வேண்டும், பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பதவி உயர்வுகளை வழங்கிடுதல், தற்போது நடந்து வரும் பணிமாற்றத்தை குறித்த காலத்திற்குள் விரைவாக முடிக்க வேண்டும்,

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 2012–ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வு கால பணபயன்களான பணிக்கொடை, கருணை தொகை, ஈட்டியவிடுப்பு ஆகியவற்றை வழங்கிடுதல், அரசு ஏற்ற பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள சட்ட பூர்வ நிதி இழப்பான ரூ.1,700 கோடியை தமிழக அரசு பல்கலைக்கழகத்திற்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழு சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இவர்கள் பல்கலைக்கழக பூமா கோவில் அருகே உண்ணாவிரத போராட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமையில் காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள், துணை வேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்