கோவில்பட்டியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்ததாக கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்ததைக் கண்டித்தும்
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்ததாக கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்ததைக் கண்டித்தும், இதுகுறித்து நகரசபை ஆணையாளரிடம் முறையிடச் சென்ற வியாபாரிகளைக் கைது செய்ததைக் கண்டித்தும், கோவில்பட்டியில் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரசபை அலுவலகம் முற்றுகைகோவில்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் நகரசபை சுகாதார அதிகாரிகள் நேற்று காலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்ததாக கூறி, கடைக்காரர்களுக்கு ரசீது வழங்காமல் ரூ.2 ஆயிரம் வரையிலும் அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பேரமைப்பு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கரன், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடேசுவரன், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ரவி மாணிக்கம், மாடசாமி, கடலைமிட்டாய் விற்பனையாளர்கள் சங்கம் கண்ணன், விஜயராஜ், எழுதுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்கம் செல்வம், சுப்புராஜ், சேவு கடை வியாபாரிகள் சங்கம் ஆறுமுகசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
25 வியாபாரிகள் கைதுபின்னர் நகரசபை ஆணையாளர் அச்சையாவை வியாபாரிகள் சந்திக்க சென்றனர். அப்போது அவர், மற்ற அதிகாரிகளுடன் பேசி கொண்டிருந்தார். எனவே, அவர் வியாபாரிகளை சந்திக்கவில்லை. இதையடுத்து நகரசபை அலுவலகத்தில் வியாபாரிகள் தரையில் அமர்ந்து, காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு வந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார், காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 25 பேரையும் கைது செய்தார்.
கடையடைப்பு போராட்டம்இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகரசபை ஆணையாளரை கண்டித்தும், கோவில்பட்டியில் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி மெயின் ரோடு, தெற்கு பஜார், மாதாங்கோவில் ரோடு, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், ஜவுளி கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. நகரசபை தினசரி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும். ஏற்கனவே சரக்கு, சேவை வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து துன்புறுத்த கூடாது’ என்று தெரிவித்தனர்.