ஸ்மார்ட் போனும், ஸ்மார்ட் அப்ளிகேஷன்களும்..!
படிப்பிற்கு மட்டுமா..? பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகளின் பாதுகாப்பிற்கும் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன.
இன்றைய கணினியுக பயன்பாட்டை கையாளுவதில் மாணவர்கள், மிகவும் ஸ்மார்ட்டானவர்கள். பள்ளி பாடங்களையும், வீட்டு பாடங்களையும் ஸ்மார்ட் போனிலும், டேப்லெட்டிலும், மடிக்கணினியிலும் படிக்கும் அளவிற்கு ஸ்மார்ட் ஆகிவிட்டார்கள். ஆம்...! வீடியோ கேம், வீடியோக்கள்... என மாணவர்களின் கவனத்தை திசை திருப்பி வந்த ஸ்மார்ட்போன்கள் சமீப காலமாக நல்ல அப்ளிகேஷன்களையும் வழங்கி வருகிறது. வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்த காலம் மலையேறி, எப்படி பெருக்கவேண்டும், ஏன் பெருக்க வேண்டும்... போன்ற விளக்கங்களுடன் சொல்லிக்கொடுக்கும் அப்ளிகேஷன்கள் நிறைய வந்துவிட்டன. அதுமட்டுமா..? புரியாத அறிவியல் கோட்பாடுகளை தெளிவுபடுத்தும் செயலி, கணக்கு சூத்திரங்களை எளிமைப்படுத்தும் செயலி... என ஏகப்பட்ட அப்ளிகேஷன்கள் அணி வகுத்து நிற்கின்றன. அதில் மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான அப்ளிகேஷன்களை வரிசைப்படுத்துகிறோம்.
பள்ளி பாடங்களையும், வீட்டு பாடங்களையும் குறிப்பு எடுக்க ஏராளமான அப்ளிகேஷன்கள் உள்ளன. அதில் எவர் நோட், கூகுள் கீப், பாக்கெட், எனிடூ, மைஜென்டா போன்றவை முக்கியமானவை. சிலர் நண்பர்களின் பாடக்குறிப்புகளை கொண்டு படிப்பார்கள். அவர்களுக்காகவே வந்திருக் கிறது கேம் ஸ்கேனர், டாக் ஸ்கேனர். இவை புத்தக தாளையும், பாடக்குறிப்புகளையும் போட்டோ முறையில் சேமித்துக்கொள்ளும். அதை நாம் விரும்பும் வகையில் பி.டி.எப். அல்லது எம்.எஸ். வேர்ட் வகையில் பயன்படுத்த முடியும். அதேபோன்று கேமரா உதவியுடன் கணிதச் சமன்பாடுகளைத் தீர்க்க ‘போட்டோ மேக்ஸ்’ என்ற அப்ளிகேஷன் அவசியமாகிறது.
கேமரா மூலம் வகுப்பறை வெண்பலகையின் குறிப்புகளைப் படமெடுத்து அவற்றை பி.டி.எப். மற்றும் வோர்ட் கோப்புகளாகச் சேமிக்க ‘ஆபீஸ் லென்ஸ்’ உதவுகிறது. இதுமட்டுமா..? அன்றாடப் படிப்பு, வீட்டுப் பாடம், பருவத் தேர்வுகளுக்கான தயாரிப்பு ஆகியவற்றுக்கு ‘டைம் டேபிள்’, ‘மை கிளாஸ் ஷெடியூல்’, ‘மை ஹோம் ஒர்க்’ போன்ற செயலிகள் உதவும். இவை நம்மை பள்ளிக்கு தயார்படுத்துகின்றன. இன்று என்னென்ன வகுப்பு இருக்கிறது, எந்தெந்த பாடப்புத்தகங்களை கொண்டு செல்லவேண்டும் போன்றவற்றோடு, பள்ளியில் என்னென்ன வீட்டுப்பாடம் கொடுத் திருக்கிறார்கள் என்பது வரை நமக்கு நினைவூட்டுகிறது.
அகராதியை அதிகம் பயன்படுத்துபவர்கள் டிக்ஸ்னரி.காம் செயலியை நிறுவி கொள்ளலாம். அத்தோடு கணக்கு பாடத்தில் தடுமாறுபவர்களை கரைசேர்க்க உதவுகிறது, ‘மேத் வே’. இந்த செயலி ஒரு கணக்கு வாத்தியார். நம்முடைய சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கத்தை கேட்கும்போதெல்லாம் வழங்குவார்.
இவை அனைத்தும் பள்ளி பாடத்தை தயாரிக்கும் அப்ளிகேஷன்கள் என்றால், படித்ததை திருப்பிப்பார்ப்பதற்காகவும் அப்ளிகேஷன்கள் உள்ளன. ஸ்டடி புளூ, கோ கான்கூர் ஆகியவை நம்முடைய பாடக்குறிப்புகளை தேர்வு நேரத்தில் திருப்பிப் பார்க்க உதவும் அப்ளிகேஷன்கள்.
பாடக்குறிப்புகள், பிளாஷ் கார்ட்ஸ், மன வரைபடம், ஸ்லைடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் பாடக்குறிப்புகளை திருப்பி பார்க்க உதவும். டி.சி.யை., எக்ஸாம் பிரப் என்ற தலைப்பின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான பாட உதவிகள், ஜெ.இ.இ., காட், கேட், ஜி.ஆர்.இ. போன்ற தேர்வுகளுக்கான தயாரிப்புகள் கிடைக்கின்றன. ‘பென்ச் பிரப்’ செயலி சமூக வலைத்தள அடிப்படையில், பாடக் குறிப்புகள் மற்றும் விநாடி வினா பாணியில் தேர்வு தயாரிப்புக்கு உதவும். கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வுக்கான பணியை புத்தகத்தின் ‘பார்கோடு’ உதவியுடன் முடித்து தருகிறது ‘ஈசி பிரப்’ செயலி. பிரெஞ்சு, ஜெர்மன் உட்பட 20–க்கும் மேற்பட்ட மொழிகளைக் கையாளவும், கற்றுக் கொள்ளவும் ‘டியோலிங்கோ’ செயலி உதவும்.
படிப்பிற்கு மட்டுமா..? பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகளின் பாதுகாப்பிற்கும் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றில் பிரபலமான ‘சர்கிள் ஆப் 6’ போன்ற செயலிகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
நிர்பயா சம்பவத்துக்கு பிறகு இந்தியாவில் பெண்களுக்கு என பிரத்யேக செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அறிமுகமில்லாத புதிய இடங்களுக்கு செல்லும்போதும், பாதுகாப்பில் சந்தேகம் எழும்போதும் பெற்றோர் அல்லது நம்பகமானவர்களுடன் தொடர்பில் இருப்பது, காவல் துறையினர் உதவியை பெறுவது உள்ளிட்ட உதவிகளை மை சேப்டி பின், பிசேப், ரியாக்ட் மொபைல், சில்லா, உமன் சேப்டி போன்ற செயலிகளின் மூலம் பெறலாம். இந்த செயலிகளில் ஒவ்வொன்றாக நிறுவி பார்த்து பின்னர் மாணவர்கள் தங்களுக்கு உகந்ததை இறுதியாக முடிவுசெய்வது நல்லது.
படிப்பிற்காகவும், வேலை நிமித்தமாகவும் வெளியூரில் தங்கி இருப்பவர்கள் தங்களது ஸ்மார்ட் போனில் கூகுள் மேப்ஸை தரவிறக்கம் செய்திருக்க வேண்டும். அப்போது தான் அடுத்தவரின் உதவியின்றி நடமாட முடியும். மேலும் கல்லூரி மாணவர்கள் தங்களது அன்றாட செலவுகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ‘தோஷில்’ என்ற அப்ளிகேஷன் உதவுகிறது. இவற்றுடன் உணவு, உறக்கம், உடல்நலம் போன்ற ஆரோக்கிய பலன்களுக்கும் செயலிகள் உண்டு.
உடல் நலன், எடைக்கண்காணிப்பு, உடற்பயிற்சி போன்றவற்றை கவனத்தில் கொள்வதற்கு ‘7 மினிட் ஒர்க் அவுட்’ என்ற அப்ளிகேஷன் உதவுகிறது. மன அழுத்தம் தவிர்க்க ‘ஹெட் ஸ்பேஸ்’ அப்ளிகேஷன் கைகொடுக்கிறது.
இதுபோன்ற ஏராளமான அப்ளிகேஷன்கள் பிளே ஸ்டோரிலும், ஆப் ஸ்டோரிலும் கொட்டிக்கிடக்கின்றன. அதை சரியாக பயன்படுத்தி கொண்டால், ஸ்மார்ட்போன் மிகவும் ஸ்மார்ட் ஆகிவிடும். அதோடும் நம்மையும் ஸ்மார்ட் ஆக்கிவிடும்.