பெங்களூருவில் கொட்டித் தீர்த்தது மழை கடுமையான போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடியது.

Update: 2017-10-05 23:51 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஓரிரு நாட்கள் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் வானம் பளிச்சென்று இருந்தது. லேசான வெயிலும் அடித்தது. இந்த நிலையில் மதியம் 1 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்ததால் பகல் வெளிச்சம் குறைந்து இருண்ட நிலை உருவானது.

2 மணியளவில் லேசாக தூறல் விழுந்தது. அது கனமழையாக மாறியது. இந்த மழை தொடர்ந்து 3.30 மணி வரை கொட்டியது. 1½ மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. நகரில் பரவலாக இந்த மழை பெய்தது. இதனால் எலக்ட்ரானிக் சிட்டி, மடிவாளா, எச்.எஸ்.ஆர்.லே-அவுட், கோரமங்களா, சாந்திநகர், சிவானந்தசர்க்கிள், நாயண்டஹள்ளி, சுல்தான்பேட்டை உள்பட பல்வேறு சாலைகள் குளங்களாக மாறின. அந்த சாலைகளில் முழங்கால் உயரத்திற்கு மழைநீர் ஆறு போல் ஓடியது.

எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஓசூர் ரோட்டில் ஒரு பி.எம்.டி.சி. பஸ் தண்ணீரில் பாதி அளவுக்கு முழ்கியது. இதனால் அந்த பஸ் பழுதாகி அங்கேயே நின்றுவிட்டது. அதே போல் சிவானந்தசர்க்கிள் சுரங்க பாலத்திலும் ஆள் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல முடியாமல் பரிதவித்தன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.

நகரில் ஓசூர் ரோடு, சிவானந்தசர்க்கிள் ரோடு, நிருபதுங்கா ரோடு, லால்பாக் ரோடு, ஜே.சி.ரோடு, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கித்தவித்தன.

எச்.எஸ்.ஆர்.லே-அவுட், கோரமங்களா பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரை தளத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. ராஜாஜிநகரில் ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து விழுந்து கிடந்த மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர்.

அதே போல் குருபாரஹள்ளி சந்திப்பிலும் ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதில் ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. அந்த மரத்தையும் உடனே மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றினர். எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான இன்போசிஸ் கட்டிடத்திற்குள்ளும் மழைநீர் புகுந்து ஆறு போல் ஓடியது. அந்த நிறுவனமே வெள்ளத்தில் மிதந்தது. அந்த நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் ஓடும் தண்ணீரில் தடுமாறியபடி வெளியே வந்தனர். மொத்தத்தில் நேற்று பெய்த மழைக்கு நகரமே தண்ணீரில் மிதந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்