மைசூரு சாமுண்டி மலையில் சாமுண்டீசுவரி அம்மன் கோவில் தேரோட்டம்
மைசூரு சாமுண்டி மலையில் நேற்று சாமுண்டீசுவரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
மைசூரு,
மைசூரு சாமுண்டி மலையில் நேற்று சாமுண்டீசுவரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. மகாராணி பிரமோதாவி, இளவரசர் யதுவீர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா கடந்த மாதம்(செப்டம்பர்) 21–ந் தேதி தொடங்கி 30–ந் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் சிகர நிகழ்ச்சியாக ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீசுவரி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதனால் விதவிதமாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்த அம்மனுக்கு திருஷ்டி விழுந்திருக்கும். அந்த திருஷ்டியை கழிப்பதற்காக தசரா விழா முடிந்ததும் 3–வது அல்லது 5–வது நாளில் சாமுண்டி மலையில் தேரோட்டம் நடப்பது வழக்கம்.
அதன்படி நேற்று காலை 8.05 மணிக்கு சாமுண்டீசுவரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு மைசூரு அரண்மனையின் மகாராணி பிரமோதாதேவி, இளவரசர் யதுவீர் சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து மகாராணி பிரமோதாதேவியும், இளவரசர் யதுவீரும் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் மலைக்கு நடந்து வந்தே தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும் சில பக்தர்கள், மற்ற பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர். தேரோட்டத்தின் முன்பாக வாணவெடிகள், பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை(சனிக்கிழமை) சாமுண்டி மலையில் உள்ள தேவிகெரே குளத்தில் தெப்ப உற்சவம் நடக்க உள்ளது. தேரோட்டத்தையொட்டி சாமுண்டி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.