சிவமொக்காவை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 11 பேர் உகாண்டா நாட்டில் சிறைவைப்பு

நாட்டு மருந்து விற்பனை செய்ய உகாண்டா நாட்டுக்கு சென்ற சிவமொக்காவை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 11 பேரை அந்நாட்டு போலீசார் மருந்து விற்பனை செய்ய உரிய ஆவணம் இல்லை என்று கூறி கைது செய்து சிறைவைத்து உள்ளனர்.

Update: 2017-10-05 23:16 GMT

சிவமொக்கா,

நாட்டு மருந்து விற்பனை செய்ய உகாண்டா நாட்டுக்கு சென்ற சிவமொக்காவை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 11 பேரை அந்நாட்டு போலீசார் மருந்து விற்பனை செய்ய உரிய ஆவணம் இல்லை என்று கூறி கைது செய்து சிறைவைத்து உள்ளனர். அவர்களை மீட்கக்கோரி சிவமொக்கா கலெக்டரிடம் அவர்களின் உறவினர்கள் மனு அளித்து உள்ளனர்.

சிவமொக்கா தாலுகா ஹாரோபெனவள்ளி கிராமத்தை சேர்ந்த ராம்ஜியன், ஜெகநாத், லத்தி, சந்தேஷ், சந்தீப், ராஜ்பாபு, இசாக், பெண்களான காஜல், பாதல், மேனகா, சுனந்தா ஆகிய 11 பேரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உகாண்டா நாட்டிற்கு நாட்டு மருந்து விற்பனை செய்ய சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர்களிடம், நாட்டு மருந்துகளை விற்பனை செய்ய உரிய ஆவணம் இல்லை என்று கூறி அந்த நாட்டை சேர்ந்த புருண்டி போலீசார் அவர்கள் 11 பேரையும் கைது செய்து சிறை வைத்து உள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் சிவமொக்கா மாவட்ட கலெக்டர் லோகேசை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் உகாண்டா நாட்டுக்கு நாட்டு மருந்து விற்பனை செய்ய சென்ற 11 பேரை அந்த நாட்டு போலீசார், மருந்துகளை உரிய ஆவணம் இன்றி விற்பனை செய்ததாக கைது செய்து உள்ளனர்.

மேலும் அவர்களை இந்தியாவுக்கு திரும்பி அனுப்பாமல் சிறை வைத்து உள்ளனர். இதனால் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு தரவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டரும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதுகுறித்து மருந்து விற்பனை செய்ய சென்றவர்களின் உறவினர்கள் கூறும்போது, வெளிநாடுகளில் நாட்டு மருந்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும், இதனால் அவர்கள் மருந்துகளை விற்பனை செய்ய உகாண்டா நாட்டுக்கு சென்ற போது மருந்து விற்பனை செய்ய உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்டு தர கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளோம் என்று தெரிவித்தனர்.

கடந்த 4 மாதத்திற்கு முன்பு இதேப்போல் சிவமொக்காவில் இருந்து உகாண்டாவுக்கு நாட்டு மருந்து விற்பனை செய்ய சென்ற சிலரை போலீசார் இனிமேல் நாட்டு மருந்துகளை விற்பனை செய்ய உகாண்டாவுக்கு வரமாட்டோம் என்று எழுதி வாங்கிவிட்டு 4 நாட்கள் கழித்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்