தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கும்பகோணத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2017-10-05 22:45 GMT
கும்பகோணம்,

தமிழகத்தில் பா.ஜ.க. மாபெரும் கட்சியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் இணைப்பு விழாக்கள் நடைபெற்று வருகிறது. மதுரையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நடைபெறும் ஊர்வலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். தமிழக அமைச்சர்கள் பங்கேற்பது அவர்கள் விருப்பம், இதை யாரும் குறை கூற முடியாது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் பணிகளுக்கு தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் அந்த திட்டம் நிறை வேறும்.

தவறான பிரசாரம்

அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாக தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் பேக்கிங் செய்யப்பட்ட அரிசிக்கு மட்டும் தான் வரி விதிக்கப்படுகிறது. சில்லறை வியாபாரிகளுக்கு இந்த வரி இல்லை. தற்போது நாட்டின் பணவீக்கம் 4.2 சதவீதமாக குறைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தாமல் தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னம் இனி யாருக்கு கிடைத்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆட்சியாளர்கள் கட்சியில் கவனம் செலுத்துவதை போன்று நிர்வாகத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் காவிரி, வைகை, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் மணல் கொள்ளை நடை பெறுகிறது. அதை தடுக்காமல் நதிகளை இணைப்பு என்பது சாத்தியமல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மண்டல பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்