சேலம் மாவட்டத்தில், ஒரே நாளில் மர்ம காய்ச்சலுக்கு 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் மர்ம காய்ச்சலுக்கு 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-10-05 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மர்ம காய்ச்சலுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேச்சேரி அருகே உள்ள சொரையனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் கவிஆனந்த்(வயது 9). இவன் மேட்டூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கவிஆனந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். உடனே அவனை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கவிஆனந்த் பரிதாபமாக இறந்தான்.

பழைய எடப்பாடி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஜயன். இவருடைய மனைவி மகேஷ்வரி(26). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ்வரி உயிரிழந்தார். மேலும் அவருடைய மகள் மோனிஷா(7) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாள்.

எடப்பாடி அருகே உள்ள உத்தண்டிக்காடு தாவாந்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகள் சுவேதா(14). காய்ச்சலால் அவதியுற்று வந்த இவள் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுவேதா பரிதாபமாக இறந்தாள்.

இதேபோல் கன்னங்குறிச்சி 8-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவருடைய மகன் பூபதி(6). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பூபதி நேற்று இறந்தான். மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றும் 2 மாணவிகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரிப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது 2 வயது மகன் விக்னேஷ். கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் சிறுவன் அவதிப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் விக்னேஷ் அனுமதிக்கப்பட்டான்.

டாக்டர்கள் தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சிறுவன் விக்னேஷ் உயிரிழந்தான். டெங்கு காய்ச்சலால் அவன் உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் தரப்பில் தெரிவித்தனர். ஆனால், டாக்டர்கள் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.

மேட்டூர் அருகே உள்ள குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி சத்யா (24). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வாரம் மர்ம காய்ச்சலால் சத்யா அவதிப்பட்டு வந்தார். அதைத்தொடர்ந்து மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சத்யா அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் குணமாகவில்லை என்பதால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சத்யா உயிரிழந்தார். 

மேலும் செய்திகள்