மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது 21 வாகனங்கள் பறிமுதல்

திருச்சியில் மோட்டார் சைக்கிள்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-10-05 22:30 GMT
திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் கீதா புரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் சத்திரம் பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை இவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர் ரூ.1,000-த்தை பறித்து சென்றார். இது குறித்து சண்முகம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பகல் ஓயாமரிரோடு தில்லைநாயகம் படித்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் ஏற்கனவே திருட்டு போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

21 வாகனங்கள் பறிமுதல்

இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பட்டினம்குறிச்சியை சேர்ந்த மலர்மன்னன் என்பதும், இவர் தான் சத்திரம் பஸ் நிலையத்தில் பூ வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றதும் தெரியவந்தது.

மேலும், இவர் திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட கோட்டை பகுதியில் 15 மோட்டார் சைக்கிள்களும், காந்திமார்க்கெட் பகுதியில் 6 மோட்டார் சைக்கிள்களும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து மலர்மன்னனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்