எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய விபத்து மேற்கு ரெயில்வே, என்.ஐ.ஏ.க்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய நடைமேம்பால விபத்து குறித்து பதில் அளிக்குமாறு மேற்கு ரெயில்வேக்கும், என்.ஐ.ஏ.க்கும் ஐகோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்தது.
மும்பை,
மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய நடைமேம்பால கூட்ட நெரிசலில் சிக்கி, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணை நடத்த உத்தரவிட கோரி மும்பை ஐகோர்ட்டில் 2 பேர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். மனுவில் கூறி இருப்பதாவது:–எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தை அன்றாடம் பயன்படுத்தும் பயணிகளில் பெரும்பாலானோர், கடிதம் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அதன் நிலைமையை ரெயில்வே அதிகாரிகளிடம் பல தடவை முறையிட்டிருக்கிறார்கள்.
இருந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பாலம் இடிந்து விழப் போவதாக பரவிய வதந்தி காரணமாக தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆகையால், இந்த சம்பவம் மென்மையான பயங்கரவாத தாக்குதலா? என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், இதற்கு மேற்கு ரெயில்வேயும், தேசிய புலனாய்வு முகமையும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அத்துடன், அடுத்தகட்ட விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.