‘நடைபாதை வியாபாரிகளை 15 நாளில் அப்புறப்படுத்த வேண்டும்’

மும்பை ரெயில் நிலைய நடைமேம்பாலங்களில் நடைபாதை வியாபாரிகளை 15 நாளில் அப்புறப்படுத்த வேண்டும் என ராஜ் தாக்கரே மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கு கெடு விதித்து உள்ளார்.

Update: 2017-10-06 00:00 GMT

மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் ரோடு, பரேல் ரெயில் நிலையங்களை இணைக்கும் நடைமேம்பாலத்தில் ஆயுத பூஜை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கலந்துகொள்வதற்காக அக்கட்சி தொண்டர்கள் சி.எஸ்.டி. மெட்ரோ சினிமா தியேட்டர் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சர்ச்கேட் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது ரெயில்வேக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர் சர்ச்கேட் ரெயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ரெயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி பயணிகள் பலியானது கொடூரமானது. இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த விபத்திற்கு ரெயில்வே மட்டுமின்றி மாநில அரசும் பொறுப்பேற்க வேண்டும். மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நடைமேம்பாலங்களில் நடைபாதை வியாபாரிகளின் கடைகள் 15 நாளில் அகற்றப்பட வேண்டும்.

இல்லையெனில் 16–வது நாள் நவநிர்மாண் சேனா கட்சியினர் அதை செய்வார்கள். அப்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ரெயில்வே தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ரெயில் நிலையங்களில் சரியான அடிப்படை வசதிகள் இல்லை. ரெயிலில் காலையில் வேலைக்கு சென்றவர் மாலை வீடு திரும்புவாரா என குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

நல்ல நாள் வரும் என மோடி கூறுகிறார். ஆனால் அதற்காக இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார். கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என தெரிவித்து இருந்தார். ஆனால் அது நடந்துள்ளதா?

நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தால் நாட்டின் கஜானா காலியாகி விடும் என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறுகிறார்.

பா.ஜனதா அரசு மக்களை இன்னலுக்கு தான் ஆளாக்கி வருகிறது. பணமதிப்பு நீக்கம், தூய்மை இந்தியா திட்டம், சவுபாக்கியா யோஜனா, ஜி.எஸ்.டி போன்ற திட்டங்கள் எல்லாம் வெறும் நாடகம் தான். இதனால் நாடு முன்னேற்றம் அடையாது. அதலபாதாளத்தில் தான் விழும்.

மும்பையில் எதற்காக புல்லட் ரெயில் திட்டம். முன்னாள் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இந்த திட்டம் சாத்தியமற்றது என கூறினார். இதன் காரணமாக தான் அவர் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டாரோ? என எண்ண தோன்றுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தை நான் அமைதியான முறையில் நடத்தி உள்ளேன். அடுத்த தடவை பொறுமையாக இருக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ரெயில் நிலைய நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்