காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்
காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 49). பிரபல ரவுடி. இவருக்கு குமாரி என்ற மனைவியும், தனலட்சுமி என்ற மகளும், சந்தோஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.
ஸ்ரீதர், முதலில் கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது காஞ்சீபுரம் மற்றும் சென்னை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், அடிதடி, வணிக நிறுவனங்கள், நிலங்கள் முதலியவற்றை அவற்றின் உரிமையாளர்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
காஞ்சீபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அம்பேத்கர் வளவன் என்ற நாராயணன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்ரீதர். இந்த கொலை வழக்கில் நேரில் ஆஜராகும்படி காஞ்சீபுரம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
அவர் துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளில் பதுங்கி உள்ளதாக கூறப்பட்டது. அங்கிருந்து ‘யூடியூப்’ வீடியோ மூலமாக போலீசாருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார், மனைவி குமாரி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஸ்ரீதரின் பாஸ்போர்ட்டு 2017–ல் காலாவதியாவதையொட்டி, அதை புதுப்பித்துக்கொள்வதற்கு சென்னை வந்தால் அவரை பிடிக்க சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், விமான நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகளை உஷார்படுத்தி வந்தார். விமானநிலைய போலீசாரும் ஸ்ரீதரை உயிரோடு பிடிக்க தயாராக இருந்து வந்தனர்.
இந்தநிலையில் ரவுடி ஸ்ரீதர், கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை காஞ்சீபுரம் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் உறுதி செய்தார்.
ரவுடி ஸ்ரீதர், தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:–
ஸ்ரீதரை உயிரோடு பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிரம் காட்டி வந்தனர்.
ரவுடி ஸ்ரீதர், மலேசியாவில் இருந்து கம்போடியாவுக்கு தப்பிச் சென்றதாகவும், அங்கு ஒரு பண்ணை வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தெரிந்துகொண்ட போலீசார், அவரை பிடிக்க தீவிரம் காட்டியதாகவும், அதனால் போலீஸ் கையில் சிக்காமல் இருக்க அவர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் போலீசார் அவருடைய அனைத்து சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி வைத்தனர். சர்வதேச போலீசாரால் அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டதுடன், அவரது தொடர்புகளும் கண்காணித்து வரப்பட்டது. சைபர் கிரைம் போலீசாரும் ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளிகளின் தொடர்புகளை கண்காணித்து வந்தனர்.
ஆகவே ஸ்ரீதருக்கு பணம் வந்து சேர்வது முடக்கப்பட்டது. ஒரு புறம் போலீஸ் நெருக்கடி மற்றொரு புறம் செலவுக்கு பணம் இல்லாததால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்கொலை செய்த ஸ்ரீதர் உடலை காஞ்சீபுரம் கொண்டுவர அவரது வக்கீல்களும், ஸ்ரீதரின் மகளும் நேற்று முன்தினம் இரவே கம்போடியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
போலீஸ் தனிப்படையினரும் தற்கொலை செய்து கொண்டது ரவுடி ஸ்ரீதர்தானா? என்பதை உறுதி செய்ய ஸ்ரீதரின் கைரேகை, மச்சம், தழும்பு உள்ளிட்ட அடையாளங்களுடன் ஒத்துப் போகிறதா?, அங்க அடையாளங்கள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து அவரது இறப்பு சான்றிதழை பெற கம்போடியாவுக்கு விரைந்து உள்ளனர்.
பயங்கரவாதிகளிடமும், பயங்கரவாத இயக்கங்களில் தொடர்பு உடையவர்களிடமும்தான் பெரும்பாலும் சயனைடு இருக்கும். எனவே ரவுடி ஸ்ரீதருக்கு சயனைடு கிடைத்தது எப்படி?. அவருக்கு, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்குமா? என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது மிரட்டலுக்கு பயந்து நிலங்களை இழந்து புகார் கொடுக்க தயங்கியவர்கள் தற்போது தைரியமாக வந்து புகார் கொடுப்பார்கள் என்றும் போலீசார் எதிர்பார்க்கின்றனர்.