புழல் அருகே மாயமான தனியார் வங்கி ஊழியர் பிணமாக மீட்பு கொலையா

புழல் அருகே மாயமான வங்கி ஊழியர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Update: 2017-10-05 23:00 GMT

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல், புத்தகரம் ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவருடைய மகன் தயாநுதீன் (வயது 36).

இவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. தற்போது இவருடைய மனைவி கர்ப்பமாக உள்ளார்.

கடந்த மாதம் 30–ந்தேதி காலையில் தயாநுதீன் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் அன்று மாலை அவர் வேலை முடிந்து, வீடு திரும்பவில்லை.

இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வராததால், அவரது பெற்றோர் அவரை எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து, கடந்த 1–ந்தேதி, தயாநுதீனின் பெற்றோர் தங்களது மகன் மாயமானது குறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான தயாநுதீனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், புழல், புத்தகரம் சக்திநகர் அருகே உள்ள ஒரு குளத்தில், அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், குளத்தில் மிதந்து கொண்டிருந்த ஆண் பிணத்தை மீட்டனர்.

பிணத்தின் சட்டை பையில் இருந்த அடையாள அட்டையை எடுத்து பார்த்தபோது, அது மாயமான தனியார் வங்கி ஊழியர் தயாநுதீன் என அடையாளம் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் தயாநுதீன் உடலை பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தயாநுதீனின் மர்ம சாவு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தயாநுதீன் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து, உடலை குளத்தில் வீசி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்