பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்,
பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்புபிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அணையில் இருந்து தண்ணீர் வேகமாக பீறிட்டு வெளியேறிய காட்சி அழகுற காட்சி அளித்தது.
அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:–
தாமிரபரணி பாசனத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் ஆயக்கட்டுகளுக்கு பிசான பருவ சாகுபடி தொடங்குவதற்காக இன்று முதல் (அதாவது நேற்று) நாற்று பாவுதல், நடவுதல் போன்ற ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்வதற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் சேர்வலாறு அணைகளில் உள்ள நீர் இருப்பை அனுசரித்தும், எதிர்வரும் நாட்களில் வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கப் பெறும் நீர்வரத்தை கருத்தில் கொண்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகியவற்றை உள்ளிட்டக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன் பெறும். மேலும் விவசாய பெருமக்கள் நீர்மேலாண்மை மேற்கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், அம்பை தாசில்தார் வெங்கட்ராமன், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன், அண்ணாதுரை, பழனிவேல் நட்டார், உதவி பொறியாளர்கள் மகேசுவரன், ஆதிமூலம், அணை செயற்பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், சண்முகநாதன், விக்கிரமசிங்கபுரம் நகரசபை ஆணையாளர் பிரேம் ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், நகர அ.தி.மு.க. செயலாளர்கள் கண்ணன், அறிவழகன், சிவந்திபுரம் பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் பிராங்களின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.