இரவில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

வேலூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்தமழை காரணமாக சலவன்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

Update: 2017-10-05 00:37 GMT

வேலூர்,

வேலூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்தமழை காரணமாக சலவன்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் கொளுத்தியது. இரவில் பலத்தமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் திடீரென்று மழைபெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. சுமார் 45 நிமிடத்திற்கும் மேல் தொடர்ந்து மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தொடர்ந்து இரவில் லேசான மழைபெய்து கொண்டிருந்தது. இந்த மழை காரணமாக வேலப்பாடி ராமர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஆதிலட்சுமி என்பவருடைய வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது.

அதேபோன்று வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. சுமார் 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிக்குள்ளானார்கள். தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் வீட்டக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்று வேலூர் நகரின் பல்வேறு இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

வேலூர் –66.5, திருப்பத்தூர் –42.3, வாணியம்பாடி –34, காவேரிப்பாக்கம் –33.6, ஆற்காடு –33, ஆம்பூர் –28, மேலாலத்தூர் –20.2, அரக்கோணம் –18, ஆலங்காயம் –17.8, வாலாஜா –17, சோளிங்கர் –6.

மேலும் செய்திகள்