வாணவெடி வெடித்து தொழிலாளி சாவு: நாட்டாண்மை உள்பட 6 பேர் கைது

சுரண்டை அருகே கோவில் திருவிழாவில் வாணவெடி வெடித்து தொழிலாளி பலியானது தொடர்பாக நாட்டாண்மை உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-10-04 22:15 GMT
சுரண்டை,

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே கடையாலுருட்டி மஜரா பஞ்சாயத்தில் காளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 8-ந் திருநாளான கடந்த திங்கட்கிழமை இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதிஉலா புறப்பட்டது. ஊரில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் அம்மன் சப்பரம் சென்றுவிட்டு, மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் கோவில் நிலையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

கோவில் நிலைக்கு வரும் முன்னதாக, சுரண்டை- வீரசிகாமணி மெயின் ரோட்டில் அம்மன் சப்பரத்துக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. சுரண்டை அருகே உள்ள வரகுணராமபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளியான மகா கணபதி (வயது 57) என்பவர் வாணவேடிக்கை வெடித்தார்.

அப்போது, ஒரு கடையின் வாசலில் வாண வெடிகளை வைத்துக் கொண்டு வெடித்துக் கொண்டிருந்தார். அவர் வெடித்த போது, அந்த வெடியில் இருந்து கிளம்பிய தீப்பொறியானது, எதிர்பாராதவிதமாக கடை வாசலில் வைத்திருந்த மற்ற வாணவேடிக்கை வெடிகளின் மீது விழுந்தது. இதில் அந்த வெடிகள் வெடித்து சிதறியதில், அருகே நின்று கொண்டிருந்த மகா கணபதி மீதும் தீப்பொறிகள் விழுந்தது. இதனால் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த 4 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

6 பேர் கைது

இந்த நிலையில் முன்னேற்பாடு இல்லாமல் கவனக்குறைவாக வாணவேடிக்கை நடத்தியது தொடர்பாக காளியம்மன், மாரியம்மன் கோவில் நாட்டாண்மையான கடையாலுருட்டியைச் சேர்ந்த அருணாசலம் (73), கோவில் நிர்வாகிகள் நமச்சிவாயம் (63), மாரியப்பன் (38), கடற்கரைசாமி (40), முருகேசன் (46), காசிபாண்டி (58) ஆகிய 6 பேர் மீது சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். 

மேலும் செய்திகள்