சுங்குவார்சத்திரம் அருகே பண்ணை வீட்டில் திருட முயன்ற கொள்ளையன் அடித்துக்கொலை
சுங்குவார்சத்திரம் அருகே பண்ணை வீட்டில் திருட முயன்ற கொள்ளையன் அடித்துக்கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக காவலாளி மற்றும் அவருடைய மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலாஜாபாத்,
சென்னையை சேர்ந்தவர் உஷாபிரியன்(வயது 80). மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு, காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பொடாவூர் பகுதியில் சொந்தமாக பண்ணை வீடு உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த பண்ணை வீட்டை அவர் வாங்கி உள்ளார். தற்போது அங்கு தோட்டம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பண்ணை வீட்டில் காவலாளியாக அதே பகுதியை சேர்ந்த சரவணன்(45) இருந்து வருகிறார். இவர், பண்ணை வீட்டின் அருகே தனது மனைவி யமுனா மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு காவலாளி சரவணன், தனது மனைவி யமுனாவுடன் பண்ணை வீட்டுக்கு காவலுக்கு வந்தார். அப்போது பண்ணை வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே கொள்ளையர்கள் நிற்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கணவன்–மனைவி இருவரும் சத்தம் போட்டபடி வீட்டுக்குள் நுழைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள், பயந்து போய் பண்ணை வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓட முயன்றனர். அவர்களை சரவணனும், யமுனாவும் பிடிக்க முயன்றனர்.
அவர்களில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். கொள்ளையர்களில் ஒருவனை கணவன்–மனைவி இருவரும் மடக்கிப் பிடித்தனர். அப்போது கொள்ளையன் கத்தியால் தாக்கியதில் யமுனா காயம் அடைந்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், தன்னிடம் இருந்த உருட்டுக்கட்டையால் கொள்ளையனின் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த கொள்ளையன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
சிறிது நேரத்துக்கு பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். கொள்ளையன் தாக்கியதில் ரத்தக் காயம் அடைந்த யமுனாவை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட கொள்ளையனுக்கு 45 வயது இருக்கும். அவன் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.
அவனோடு வந்த 2 கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளி சரவணன், அவருடைய மனைவி யமுனா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.