மண் அரிப்பால் கரைகள் சேதம்: கிருஷ்ணா கால்வாயில் ரூ.2½ கோடியில் கான்கிரீட் சுவர்

கிருஷ்ணா நதி கால்வாயில் மண் அரிப்பால் கரைகள் சேதம் அடைந்த பகுதியில் ரூ.2.50 கோடி செலவில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Update: 2017-10-04 22:45 GMT

ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இதில் பூண்டி ஏரியில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் மழை நீர் சேமித்து வைத்து, தேவைப்படும் போது புழல் ஏரிக்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் 2015–ம் வருடம் டிசம்பர் மாதத்தில் பெய்த பேய் மழைக்கு கிருஷ்ணா நதி கால்வாயில் வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு பாய்ந்து வந்தது.

இதனால் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் பகுதியில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில் 25–க்கும் மேற்பட்ட பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு கரையில் உள்ள சிமெண்டு ஓடுகள் பெயர்ந்து விழுந்தன.

குறிப்பாக ஆலபாக்கம் குஞ்சலம், மயிலாப்பூர், பூண்டி, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் கிருஷ்ணா நதி கால்வாய் கரைகள் மிகவும் மோசமாக சேதம் அடைந்தன. இந்த பகுதிகளில் கால்வாயின் ஓரமாக கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க தமிழக அரசு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கியது.

இந்த நிதியை கொண்டு கிருஷ்ணா நதி கால்வாயில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரகலாதரன், உதவி பொறியாளர் பிரதீஷ் மேற்பார்வையில் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்னும் 2 மாதங்களில் இந்த பணிகளை முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகள் முடிவடைந்தால் கிருஷ்ணா நதி கால்வாயில் இருந்து தங்கு தடை இன்றி பூண்டி ஏரிக்கு தண்ணீர் சென்றடையும்.

மேலும் செய்திகள்