ஏரியூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீசார் விசாரணை
ஏரியூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை விவசாயி அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏரியூர்,
ஏரியூர் அருகே உள்ள சிக்கனூர்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 47), விவசாயி. இவருடைய மனைவி விஜயா(40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விஜயா பூச்சூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
ஒரு மாதம் ஆகியும் விஜயா கணவர் வீட்டுக்கு திரும்பி செல்லவில்லை. இதனால் அவரை அழைத்து வருவதற்காக தங்கவேல் பூச்சூருக்கு சென்றார். அங்கு அவர்களிடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது விஜயா கட்டையால் தங்கவேலை தாக்கினார். இதில் தங்கவேலின் கையில் காயம் ஏற்பட்டது.
இதன்காரணமாக கோபமடைந்த தங்கவேல் அந்த வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து விஜயாவின் தலையில் வெட்டினார். அப்போது தடுக்க முயன்ற அவர்களுடைய மகன் விஜய்க்கும்(20) கையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விஜயா மற்றும் காயமடைந்த தங்கவேல், விஜய் ஆகியோர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக விஜயாவின் தந்தை மனுவேல் கொடுத்த புகாரின் பேரில் ஏரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.