காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை அமைச்சர் உதயகுமார் தகவல்

மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2017-10-03 23:00 GMT
மதுரை,

திருமங்கலம் நகராட்சியில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் நடந்தது. அப்போது திருமங்கலத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரி சென்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டெங்கு குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. அந்த ஆய்வின் போது சில அறிவுரைகளை முதல்-அமைச்சர் வழங்கினர். அதனை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமங்கலம் அரசு மருத்துமனையில் 40 பேருக்கு சாதாரண காய்ச்சல் தான் இருக்கிறது, டெங்கு காய்ச்சல் கிடையாது. மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுகளை அதிகாரிகள் அதிக அளவில் செய்து வருகின்றனர். காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவது ஒவ்வொரு தொண்டனின் கடமையாகும். ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையூறு செய்யும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். சுயநலத்திற்காக தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அ.தி.மு.க.வை கூறுபோட அவர்கள் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் பின்னால் தொண்டர்கள் செல்லமாட்டார்கள். திருமங்கலம் தொகுதியில் இருந்து யாரும் அங்கு செல்லவில்லை. இந்த கட்சியும், ஆட்சியும் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். அதற்காக எனது உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன். கட்சியையும், இயக்கத்தையும் ஒரு போதும் காட்டிக்கொடுக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.தமிழரசன், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

முன்னதாக பேரையூரில் உள்ள முருகன் கோவில் வளாகத்தில் டி.கல்லுப்பட்டி ஒன்றிய, நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது, கடந்த ஆண்டு சட்டபேரவையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எனக்கு பின்னால் அ.தி.மு.க. கட்சி 100 ஆண்டுகள் இருக்கும் என்றார். அவரது உறுதியை காப்பாற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார். மேலும் தற்போது அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்படுவதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. தேர்தலை சந்திக்கவும் அவர்கள் விரும்பவில்லை. இதை என்னிடம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர் என்றும் ஆர்.பி.உதயக்குமார் கூறினார். ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராமசாமி, நகர செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்