“தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை” ஆர்ப்பாட்டத்தில் தா.பாண்டியன் தாக்கு

மக்கள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-10-03 22:45 GMT
சென்னை,

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை தலைமை தாங்கினார். கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான தா.பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின்போது தா.பாண்டியன் பேசியதாவது:-
பெட்ரோல்-எரிவாயு உயர்வு, விலைவாசி உயர்வு, வறட்சி, குடிநீர் பற்றாக்குறை என எந்த பிரச்சினைகளிலும் அரசு அக்கறை காட்டுவதில்லை. டெங்குவால் உயிரிழப்பு தொடருவது, தமிழகத்தை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. ஆனால் இந்த அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், பதவியை தக்க வைக்கவே போராடுகிறார்கள். மக்கள் நலனில் தோற்றுவிட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலகிட வேண்டும். அதற்கு கவர்னர் தகுந்த ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள கவர்னர் அதனை செய்வார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தா.பாண்டியன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்