பிரேத பரிசோதனைக்குப்பின் மாட்டு வண்டி தொழிலாளி உடல், உறவினர்களிடம் ஒப்படைப்பு

போலீசார் ‘ஹெல்மெட்’டால் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்பட்ட மாட்டு வண்டி தொழிலாளியின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அவரது உடலை மாஜிஸ்திரேட்டு பார்த்திபன் நேரில் பார்வையிட்டு உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

Update: 2017-10-02 23:00 GMT
கடலூர்,

கடலூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி(வயது 58). கடந்த 30-ந்தேதி இவர் திருமாணிக்குழி கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் மணல் அள்ளுவதற்கு சென்றார். அப்போது அவரை நடுவீரப்பட்டு போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது, சக்கரபாணி மர்மமான முறையில் இறந்தார். அவர் மாமூல் கொடுக்க மறுத்ததால் அவரை போலீசார் ‘ஹெல்மெட்’டால் தாக்கியதால் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் கூறினார்கள்.

இந்த சூழ்நிலையில் விலங்கல்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் நடுவீரப்பட்டு போலீசில் அளித்த புகாரில், போலீசார் வாகன சோதனையின் போது, போலீசாரை கண்டதும் சக்கரபாணி தப்பி ஓடும் போது கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக்கரபாணியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய விடமாட்டோம், மீறி செய்தாலும் உடலை வாங்கி செல்லமாட்டோம் என்று தெரிவித்தனர்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

இதனிடையே இந்த சம்பவம் பற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடுமாறு கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு நடுவீரப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரைத்தார். அதன்பேரில் சக்கரபாணியின் மரணம் பற்றி விசாரணை நடத்துமாறு சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு பார்த்திபனுக்கு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரமேஸ்வரி(பொறுப்பு)உத்தரவிட்டார்.

அதன்படி மாஜிஸ்திரேட்டு பார்த்திபன் நேற்று காலை 11 மணி அளவில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சக்கரபாணியின் மனைவி அம்பிகா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சவக்கிடங்குக்கு சென்று, சக்கரபாணியின் உடலை பார்வையிட்டார். அவரது உடலில் வெளிக்காயங்கள் ஏதும் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். பின்னர் சக்கரபாணியின் உடலை பிரேத பரிசோதனை செய்யுமாறு அரசு டாக்டர்களுக்கு பரிந்துரைத்தார். அதன்படி அரசு டாக்டர்கள் தினேஷ்பாபு, சிவசங்கரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மதியம் 12 மணி அளவில் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

உடல் ஒப்படைப்பு

இதன்பிறகு மதியம் 1-10 மணி அளவில் சக்கரபாணியின் உடல் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்சென்றனர். இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கு வளாகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நரசிம்மன், சுந்தரவடிவேலு ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக மாஜிஸ்திரேட்டு பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் படி இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறேன். சக்கரபாணியின் உடலில் வெளிக்காயங்கள் இருக்கிறதா? என்பதை பார்வையிட்டேன். அவரது உடலை 2 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டேன். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும். சம்பவம் நடந்த கிராமத்துக்கும் நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரிக்கப்போகிறேன்.

இவ்வாறு மாஜிஸ்திரேட்டு பார்த்திபன் கூறினார்.

இதன்பிறகு அவர் திருமாணிக்குழி கிராமத்துக்கு நேரில் சென்று சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். 

மேலும் செய்திகள்