டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2017-10-02 23:00 GMT
மேட்டூர்,

டெல்டா பாசன விவசாயிகளின் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதற்கிடையே, தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப் பட்டது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இந்த நீர்வரத்தின் காரணமாகவும், தமிழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அடிக்கடி பெய்து வந்த மழையின் காரணமாகவும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 94.84 அடியாக உயர்ந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 928 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் டெல்டா பாசன விவசாயிகளின் நலன் கருதி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று காலை 10 மணிக்கு அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பொத்தானை அழுத்தி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

இதையடுத்து அவர்கள் காவிரி அன்னையை மலர் தூவி வணங்கி வழியனுப்பி வைத்தார்கள். ஆரம்பத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

முன்னதாக அணையின் மேல்மட்ட மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு அணையையொட்டி அமைந்துள்ள அணை நீர்மின்நிலையம், சுரங்க நீர்மின்நிலையம் வழியாக திறந்து விடப் பட்டது.

தண்ணீர் அணை மின்நிலையம், சுரங்கமின்நிலையம் வழியாக வெளியேறுவதால் 100 மெகாவாட் மின்சாரமும், காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை, பவானி உள்பட 7 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கதவணை மின்நிலையங்களில் தலா 30 மெகாவாட் வீதம் 210 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

மேலும் செய்திகள்