சிதம்பரத்தில் காந்தி பட முகமூடி அணிந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சிதம்பரத்தில் காந்தி பட முகமூடி அணிந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-02 23:00 GMT
சிதம்பரம்,

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி செயல்படுகிறது. நிதிநிலை நெருக்கடி ஏற்பட்டதால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துகிறது. ஆனால் ராஜா முத்தைய மருத்துவ கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை வசூலிக்க வேண்டும், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் நேற்று 34-வது நாளாக நீடித்தது. சிலர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் நேற்று 11-வது நாளாக நீடித்தது.

முகமூடி அணிந்து...

காந்தி ஜெயந்தியையொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் மகாத்மா காந்தியின் உருவபட முகமூடியை அணிந்திருந்தனர். மருத்துவ கல்லூரி வளாகத்தில் வரிசையாக நின்று கொண்டும், கல்லூரி முன்பு அமர்ந்தும் மாணவ-மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், காந்தி ஜெயந்தி என்பதால் அவரது உருவபட முகமூடியாக அணிந்து அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்