தசரா விழாவின்போது ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்ற அர்ஜூனா உள்பட 15 யானைகளுக்கும் வழியனுப்பு நிகழ்ச்சி
தசரா விழாவின்போது ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்ற அர்ஜூனா உள்பட 15 யானைகளுக்கும் வழியனுப்பு நிகழ்ச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) அரண்மனை வளாகத்தில் நடக்கிறது.
மைசூரு,
மைசூருவில் உலகப்புகழ் பெற்ற தசரா விழா கடந்த மாதம்(செப்டம்பர்) 21–ந் தேதி தொடங்கி 30–ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. 21–ந் தேதி சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீசுவரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வைப்பதன் மூலம் தசரா விழாவை முதல்–மந்திரி சித்தராமையா முன்னிலையில் கன்னட கவிஞர் நிசார் அகமது தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தினமும் யோகா தசரா, மகளிர் தசரா, விவசாய தசரா, இளைஞர் தசரா என பல்வேறு தசராக்கள் நடந்தன.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் கடந்த 30–ந் தேதி நடந்தது. இந்த ஊர்வலத்தில் சாமுண்டி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து அர்ஜூனா யானை ஊர்வலமாக சென்றது. அதன்பின் மற்ற யானைகள் அணிவகுத்து சென்றன.
இந்த நிலையில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அர்ஜூனா உள்பட 15 யானைகளையும் அதன் பாகன்கள் குளிப்பாட்டினர். இதனை தொடர்ந்து யானைகளின் பாகன்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மந்திரி மகாதேவப்பா சிறப்பு விருந்து அளித்தார். மேலும் யானைகளும் வனப்பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட போது இருந்த எடையை விட தற்போது யானைகளின் எடை அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அர்ஜூனா உள்பட 15 யானைகளுக்கும் வழியனுப்பு நிகழ்ச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அரண்மனை வளாகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அவைகள் லாரிகள் ஏற்றப்படுகின்றன. இதனை தொடர்ந்து யானைகள் முகாம்களுக்கு செல்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு மந்திரி மகாதேவப்பா, மைசூரு மாவட்ட கலெக்டர் ரன்தீப் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.