225 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது

ஈரோடு மாவட்டத்தில் 225 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சின்னப்புலியூரில் நடந்த கூட்டத்துக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

Update: 2017-10-02 22:45 GMT
ஈரோடு,

காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில் நேற்று நடைபெற்றது. பவானி ஊராட்சி ஒன்றியம் சின்னப்புலியூர் ஊராட்சி குண்டுசெட்டிபாளையத்தில் உள்ள வெள்ளவிநாயகர் கோவில் வளாகத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமங்களில் மக்களிடையே குறிப்பாக பெண்களிடம் குடிநீர், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மழைக்காலம் தொடங்கி உள்ளதையொட்டி கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே தேங்காய் சிரட்டை, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் ஆகிய பொருட்களை தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். குடிநீரை மூடி வைத்து பராமரிக்க வேண்டும்.

ஆழ்துளை கிணறுகள் அமைக்க உரிய அனுமதி பெற்று பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட வேண்டும். பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை உரிய முறையில் அரசு வழிகாட்டுதலின் படி மூடப்பட வேண்டும்.

தனிநபர் கழிப்பறை அனைத்து வீடுகளிலும் கட்டப்பட வேண்டும். தனிநபர் கழிப்பறையை கட்டுவதற்காக ஒரு கழிப்பறைக்கு ரூ.12 ஆயிரம் மானியம் மத்திய, மாநில அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழித்து, தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் வீடுகளில் குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியே பிரித்து வழங்கவேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார். மேலும் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்