கர்ப்பிணி பெண்கள்–பாலூட்டும் தாய்மார்களுக்கு மதிய ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம்

கர்ப்பிணி பெண்கள்–பாலூட்டும் தாய்மார்களுக்கு மதிய ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

Update: 2017-10-02 23:30 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க 4 தாலுகாக்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மதிய ஊட்டச்சத்து உணவு வழங்கும் ‘மாத்ருபூர்ண‘ திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வந்து இந்த ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும்.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. இந்த நிலையில் மதிய ஊட்டச்சத்து உணவு வழங்கும் விரிவாக்க திட்ட தொடக்க விழா கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மதிய ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினோம். இதை இப்போது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்கிறோம். இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 10 லட்சம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும்.

பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு, பால், முட்டை ஆகியவை வழங்கப்படும். முட்டை சாப்பிடாதவர்களுக்கு புரதச்சத்து உள்ள கொட்டைகள் வேகவைத்து வழங்கப்படும். இதனால் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் பிறக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கும் இந்த உணவு கிடைப்பதால் அவர்களின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

ராம ராஜ்யம் நிர்மாணம் ஆக வேண்டும் என்று காந்தி கனவு கண்டார். இந்த திசையில் பசி இல்லாத கர்நாடகத்தை உருவாக்க அன்ன பாக்ய திட்டத்தை தொடங்கினோம். மாநிலத்தில் 4.50 கோடி பேருக்கு தலா 7 கிலோ அரிசி இலவசமாக வழங்குகிறோம். இதனால் வறட்சி காலத்திலும் மக்களுக்கு உணவு பஞ்சம் ஏற்படவில்லை.

முன்பெல்லாம் வறட்சி காலங்களில் கலபுரகி, விஜயாப்புரா, கொப்பல், பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் பிழைப்பு தேடி கோவா, மராட்டியம், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்வார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இது தடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்குகிறோம். இதனால் அவர்களிடம் ஊட்டச்சத்து அதிகரித்துள்ளது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி உமாஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்