2016–ம் ஆண்டை விட இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா உண்டியல் வருமானம் குறைந்தது

2016–ம் ஆண்டை விட, இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா உண்டியல் வருமானம் குறைவாக கிடைத்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Update: 2017-10-01 23:00 GMT

திருமலை,

இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. 2016–ம் ஆண்டு நடந்த பிரம்மோற்சவ விழாவின்போது, 8 நாட்களில் 300 ரூபாய் தரிசன டிக்கெட், திவ்ய தரிசனம், இலவச தரிசனம் ஆகியவை சேர்ந்து மொத்தம் 6 லட்சத்து 97 ஆயிரத்து 102 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு (2017) நடந்த பிரம்மோற்சவ விழாவின்போது 8 நாட்களில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 705 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 75 ஆயிரத்து 397 பக்தர்கள் குறைவாக சாமி தரிசனம் செய்துள்ளனர்.

2016–ம் ஆண்டு உண்டியல் வருமானமாக 8 நாட்களில் ரூ.20 கோடியே 23 லட்சத்து 95 ஆயிரம் கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.18 கோடியே 70 லட்சத்து 29 ஆயிரம் கிடைத்தது. இது, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ரூ.1 கோடியே 53 லட்சத்து 66 ஆயிரம் குறைவாகும்.

2016–ம் ஆண்டு ஆர்ஜித சேவை டிக்கெட் மூலம் ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்து 867 வருமானமாக கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 976 வருமானமாக கிடைத்தது. இது, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ரூ.53 ஆயிரத்து 109 அதிகமாகும்.

2016–ம் ஆண்டு லட்டு விற்பனை மூலம் (வகப்படி) ரூ.4 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 400 வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.4 கோடியே 34 லட்சத்து 96 ஆயிரத்து 894 வருமானமாக கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 506 குறைவாக கிடைத்துள்ளது.

2016–ம் ஆண்டு 8 லட்சத்து 98 ஆயிரத்து 215 பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 9 லட்சத்து 38 ஆயிரத்து 262 பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது.

சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை ஆகியவை 2016–ம் ஆண்டு 15 லட்சத்து 6 ஆயிரத்து 5 பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 14 லட்சத்து 62 ஆயிரத்து 704 பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பால், டீ, காபி ஆகியவை 2016–ம் ஆண்டு 11 லட்சத்து 32 ஆயிரத்து 371 பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 15 லட்சத்து 70 ஆயிரத்து 427 பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2016–ம் ஆண்டு தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்கள் 3 லட்சத்து 45 ஆயிரத்து 142 பேர், இந்த ஆண்டு தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்கள் 3 லட்சத்து 6 ஆயிரத்து 271 பேர்.

தங்கும் விடுதிகள் மூலம் 2016–ம் ஆண்டு ரூ.1 கோடியே 64 லட்சத்து 51 ஆயிரத்து 390 வருமானமாக கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.1 கோடியே 31 லட்சத்து 61 ஆயிரத்து 627 வருமானமாக கிடைத்துள்ளது.

2016–ம் ஆண்டு 64 ஆயிரத்து 989 பக்தர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 76 ஆயிரத்து 366 பக்தர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

2016–ம் ஆண்டு 34.14 லட்சம் கியாலன் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 289.27 லட்சம் கியாலன் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில போக்குவரத்துக்கழக அரசு பஸ்கள் மூலம் 2016–ம் ஆண்டு திருப்பதியில் இருந்து திருமலைக்கு 4 லட்சத்து 50 ஆயிரத்து 277 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். அதேபோல், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 6 லட்சத்து 5 ஆயிரத்து 271 பக்தர்கள் பயணம் செய்தனர். இந்த ஆண்டு திருப்பதியில் இருந்து திருமலைக்கு 4 லட்சத்து 26 ஆயிரத்து 61 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். அதேபோல், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 5 லட்சத்து 66 ஆயிரத்து 349 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்