அறச்சலூர் அருகே பஸ்–கார் மோதல்; லாரி டிரைவர் சாவு

அறச்சலூர் அருகே காரும், பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில், மகனின் காதுகுத்தும் விழாவுக்காக அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய தந்தை பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-10-01 22:30 GMT

அறச்சலூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கல்லேரியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). லாரிடிரைவர். மேலும் சொந்தமாக காரும் வைத்திருந்தார். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு தன்வீர் (3) என்ற மகன் உள்ளான். செந்தில்குமார் ஈரோடு அருகே நொச்சிக்காட்டுவலசில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் குழந்தை தன்வீருக்கு காது குத்தும்விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழா காங்கேயத்தில் உள்ள ஒரு கோவிலில் நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது. இதற்காக செந்தில்குமார் காங்கேயத்தில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு குடும்பத்தினரை கோவிலுக்கு அழைத்து செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு காரில் நொச்சிக்காட்டுவலசில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அறச்சலூர் சில்லாங்காட்டுப்புதூர் அருகே சென்றபோது காரும் எதிரே ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. இதில் காருக்குள் இருந்த செந்தில்குமார் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அவரது உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த செந்தில்குமாரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்