சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் மர்ம காய்ச்சல் தொடர்வதால் பொதுமக்கள் அவதி

சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் தொடரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2017-10-01 22:00 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் பேரூராட்சியில் பகுதிகளான ரி‌ஷபம், நெடுங்குளம், திருவாலவாயநல்ர்ர், சி.புதூர், சித்தாலங்குடி, திருவேடகம், மேலக்கால், தென்கரை, மன்னாடிமங்கலம், குருவித்துறை, இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பள்ளமான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி மிக அதிகமாகி வருகிறது. மேலும் ஊராட்சிகளுக்கு நிதி பற்றாக்குறையால் அன்றாட சுகாதார பணிகள் நடைபெறுவதில்லை. சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் மர்மகாய்ச்சலால் பாதிப்படைந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நோயாளிகள் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவில் குவிந்து வருவதால், வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் வரிசையில் நிற்க முடியாமல் சிலர் மயங்கி விழுந்து விடுகின்றனர்.

இங்கு பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் கூட்டத்தில் இருப்பவர்கள் சளி தொல்லையால் இருமும் போது, கூட்டத்தில் நிற்பவர்கள் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்த நோய் காற்றின் மூலம் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்