திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
பிரம்மதேசம் அருகே, திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரம்மதேசம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அந்த வகையில் திண்டிவனம்–மரக்காணம் மாநில நெடுஞ்சாலையில் முருக்கேரியில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த டாஸ்மாக் கடைக்கு பதிலாக அந்த பகுதியிலேயே வேறு இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி முருக்கேரியில் இருந்து சாத்தமங்கலம் செல்லும் சாலையில் 500 மீட்டர் தொலையில் புதிய டாஸ்மாக் கடை கட்டும் பணி நடைபெற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்றும் சாத்தமங்கலம் மற்றும் காடுவெட்டி கிராம மக்கள் கலெக்டர் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் மனு கொடுத்தனர். இருப்பினும் அந்த இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம், லாரி மூலம் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு டாஸ்மாக் கடையில் அடுக்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் அந்த கடையை திறந்து விற்பனை செய்ய தயாரானார்கள். இது பற்றி சாத்தமங்கலம், காடுவெட்டி கிராமம் முழுவதும் தகவல் பரவியது. இதையடுத்து 2 கிராம மக்களும் ஒன்று திரண்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மற்றும் பிரம்மதேசம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, டாஸ்மாக் கடையின் அருகில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரிடம் கிராம மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் சாலையில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாது. அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது. போதை தலைக்கு ஏறியதும் குடிபிரியர்களின் தொல்லை அதிகமாக இருக்கும். இரவில் குடிபிரியர்கள் கிராமத்துக்குள் புகுந்து பல்வேறு தொந்தரவு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை மூட வேண்டும். 2 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தால், கலெக்டரிடம் சென்று முறையிட்டு கடையை திறக்காமல் இருப்பதற்காக உத்தரவை வாங்கி வருவோம் என்று கூறினர்.
அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், 2 நாட்களில் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்படும். அதற்குள் கலெக்டரிடம் உத்தரவு நகலை வாங்கி வந்து கொடுத்தால், இந்த டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படும் என்று கூறினார்.
இதையடுத்து திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த டாஸ்மாக் கடையை ஊழியர்கள் மூடினார்கள். ஆனால் ஊழியர்கள் அங்கிருந்து செல்லாமல், டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், டாஸ்மாக் கடையை மீண்டும் முற்றுகையிட்டனர்.
உடனே போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் கிராம மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் அவர்கள் டாஸ்மாக் கடை நோக்கி வந்தனர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பிறகே கிராம மக்களும் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.