ஆசிட் தாக்குதலை அடக்கும் பெண்

ஐ.நா. அமைப்பின் உயரிய விருதுகளுள் ஒன்றான ‘குளோபல் கோல்ஸ்’ விருதை பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றிருக்கிறார், டெல்லியை சேர்ந்த ரியா ஷர்மா.

Update: 2017-10-01 09:30 GMT
ஐ.நா. அமைப்பின் உயரிய விருதுகளுள் ஒன்றான ‘குளோபல் கோல்ஸ்’ விருதை பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றிருக்கிறார், டெல்லியை சேர்ந்த ரியா ஷர்மா. 26 வயதான இவர் பெண்களை மனதளவிலும், உடல் அளவிலும் ரண வேதனையை அனுபவிக்க வைக்கும் கொடூர தாக்குதலான ஆசிட் வீச்சுக்கு எதிராக போராடி வருபவர். ரியா ஷர்மா இங்கிலாந்தில் தங்கி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஆவணப்படம் எடுப்பதற்காக இந்தியா வந்தார். அப்போது ஆசிட் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான ரேஷ்மா குரேஷி உள்ளிட்ட பெண்களை சந்தித்தார். அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் எதிர்கொள்ளும் வாழ்க்கை போராட்டங்கள் ரியா ஷர்மாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அதனை தன்னுடைய ஆவண படத்தில் உயிரோட்டமாக பதிவு செய்தவர், அந்த பெண்களின் மறுவாழ்வுக்கு உதவி செய்யவும் களம் இறங்கி இருக்கிறார்.

முதல்கட்டமாக இந்தியாவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை திரட்டினார். இந்தியாவில் ஆண்டுதோறும் 250 முதல் 300 ஆசிட் வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடை பெறுவது தெரியவந்தது. அதற்கு காதல் விவகாரம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் சண்டை, சச்சரவுகள்தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மறுவாழ்வு மையத்தை டெல்லியில் தொடங்கினார். அதன் மூலம் தாக்குதலுக்குள்ளான பெண்களுக்கு மருத்துவ உதவி, சட்ட உதவி, மன நல ஆலோசனை, அவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருடைய முயற்சி, ஆசிட் தாக்குதலுக்குள்ளான பல பெண்களின் வாழ்க்கைமுறையை மாற்றியிருக்கிறது. சமூகத்தில் ஒதுங்கியிருந்த அவர்கள் வெளிவந்து, தன்னம்பிக்கையோடு வாழத் தொடங்கி இருக்கிறார்கள். ரியா ஷர்மாவின் அமைப்பு மேற்கொண்ட சட்ட ரீதியான போராட்டம் பல பெண்களுக்கு அரசின் உதவியை பெற்று கொடுத்திருக்கிறது. இவரது சேவையை பாராட்டி நியூயார்க்கில் நடந்த விழாவில் ‘குளோபல் கோல்ஸ்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை யுனிசெப் அமைப்பின் தூதுவரான நடிகை பிரியங்கா சோப்ரா வழங்கினார். 

மேலும் செய்திகள்