காரில் கஞ்சா பதுக்கிய வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் இருந்து முன்னாள் எம்.பி.யின் பேரன் தப்பியோட்டம்

காரில் கஞ்சா பதுக்கிய வழக்கில் கைதான முன்னாள் எம்.பி.யின் பேரன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Update: 2017-09-30 21:46 GMT

பெங்களூரு,

பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிளில் கடந்த 27–ந் தேதி நள்ளிரவில் சென்ற கார் மீது சொகுசு கார் மோதியது. இதில், 2 கார்களும் சேதமடைந்தன. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சொகுசு காரில் இருந்த 4 பேரை பிடித்து தர்ம–அடி கொடுத்தனர். அப்போது, 3 பேர் தப்பியோடிவிட்டனர். இன்னொருவரை பொதுமக்கள் பிடித்து வைத்து கொண்டனர். சம்பவ இடத்துக்கு ஜெயநகர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட நபரிடம் விசாரித்தனர்.

அப்போது, அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி.யும், தொழில்அதிபருமான ஆதிகேசவவுலு நாயுடுவின் பேரன் விஷ்ணு என்பதும், குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த காரில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, கஞ்சா பதுக்கியது என விஷ்ணு மீது போலீசார் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்து கொண்டனர்.

மேலும், சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷ்ணு நேற்று முன்தினம் மருத்துவமனையில் உள்ள அவசர படிக்கட்டு வழியாக தப்பித்து ஓடினார். மருத்துவமனை ஊழியர் ஒருவர் உதவியுடன் அவர் தப்பித்து செல்லும் காட்சிகள் மருத்துவமனை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், தப்பித்து சென்ற விஷ்ணுவை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் விஷ்ணுவை கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்