திருவள்ளூர் அருகே ஏரிக்கரை ஓரம் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு போலீசார் விசாரணை
திருவள்ளூர் அருகே ஏரிக்கரை ஓரம் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் இருந்து புன்னப்பாக்கம் செல்லும் சாலையில் ஏரிக்கரை ஓரம் நேற்று முன்தினம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.
அவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தை நலமுடன் உள்ளது. இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை ஏரிக்கரை ஓரம் வீசி சென்ற பெண் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.