உத்தமபாளையம் அருகே சரக்கு வேன்– மினிபஸ் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி

உத்தமபாளையம் அருகே சரக்கு வேன்–மினிபஸ் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-09-30 22:00 GMT

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள சின்னஓவுலாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 75). இவர் தனது உறவினர்களுடன் கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் கோவிலுக்கு சரக்கு வேனில் சென்றார். வேனை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார். ராயப்பன்பட்டி அருகே வேன் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண்இமைக்கும் நேரத்தில் சரக்கு வேனும், மினிபஸ்சும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சரக்கு வேன் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் மினிபஸ்சும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனில் பயணம் செய்த மாரிமுத்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் வேனில் வந்த ராஜன் (50), கண்ணம்மா (75) மற்றும் டிரைவர் பாஸ்கரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ராயப்பன்பட்டி போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டனர். விபத்தில் காயம் அடைந்த 4 பேருக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிபஸ் டிரைவர் உதயகுமார் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்