திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் 56–வது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் 56–வது வார்டுக்குட்பட்ட ஆலங்காடு கே.வி.பி.லே அவுட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 56–வது வார்டுக்குட்பட்ட பெரும்பால பகுதிகளில் இருந்து மாநகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையோரத்தில் கொட்டப்பட்டு வந்தது.
இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் நேற்றுகாலை குப்பை கொட்டப்படும் இடத்தில் கூடினார்கள். பின்னர் குப்பை கொட்டுவதை தடை செய்யக்கோரி ஆலங்காடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மத்திய போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், அந்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை உடனடியாக மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.