கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2017-09-28 23:30 GMT
திருவொற்றியூர், 

சென்னை துறைமுகத்தில் இருந்து மத்திய அரசு நிறுவனமான மணலி சி.பி.சி.எல். தொழிற்சாலைக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக ராயபுரம், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் வழியாக சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரை ஓரமாக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வடசென்னை திருவள்ளூர் கடலோர பாதுகாப்பு சங்கம் சார்பில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் மண்டல அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க தலைவர் கே.கிருஷ்ணன், செயலாளர் கோசுமணி, பொருளாளர் சுகுமாறன், த.மா.கா. பகுதி தலைவர் கே.ஆர்.சிவகுமார் ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய-மாநில அரசுக்கு எதிராகவும், கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்