கீழடியில் குடியிருப்புகள் இருந்திருக்கலாம் தொல்லியல் துறை அதிகாரி பேட்டி

கீழடியில் குடியிருப்புகள் இருந்திருக்கலாம் என தொல்லியல் துறை கீழடி அகழாய்வு பணி கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் கூறினார்.

Update: 2017-09-17 23:45 GMT

மதுரை,

மதுரை அருகே கீழடியில் இந்திய தொல்லியல் துறையினரால் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், வரலாற்றின் தொடக்க காலத்தை சேர்ந்த செங்கல் கட்டுமானங்கள் மற்றும் பலவகையான தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், தொல்லியல் துறை கீழடி அகழாய்வு பணி கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கீழடியில் தற்போது 3–ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வருகிற 30–ந்தேதியுடன் முடிவடைகிறது. இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழையின் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இங்கு நடந்த ஆராய்ச்சியில் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. எனவே இங்கு குடியிருப்புகள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்களை வைத்து தான் சந்தேகம் எழுந்துள்ளது. குடியிருப்புகள் இல்லாமல் கூட இருக்கலாம்.

இதுவரை 400 சதுரமீட்டர் பரப்பளவில் ஆய்வு செய்துள்ளோம். கடந்த 6 மாதங்களில் 1,800 பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் 2,200 ஆண்டுகள் பழமையான பொருட்களும் கிடைத்துள்ளன. அவற்றில் 1,500–க்கும் மேற்பட்டவையாக மணிகளே ஆகும். மொத்த மணிகளில் 90 சதவீதம் கண்ணாடியில் செய்யப்பட்டவை. மீதமுள்ள மணிகள் பளிங்கு, சூதுபவளம், பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும்.

இதுதவிர 14 தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் வேந்தன், ஒளியன் என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களும் முகாமில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மூலம் அருங்காட்சியகம் அமைக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்தால், அருங்காட்சியகம் அமைக்கப்படும். அருங்காட்சியகம் என்பது கடைசி பணிதான். எனவே அதுகுறித்து ஐகோர்ட்டு தான் முடிவு செய்யும். அகழாய்வு குறித்து 2 மாதத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்