அவினாசி அருகே 4 பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு
அவினாசி அருகே தெக்கலூரில் 3 பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி,
திருப்பூரில் இருந்து நேற்று மாலை 3.45 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் அனுப்பர்பாளையம் அருகே சென்ற போது, பஸ்சில் ஏறிய சில பயணிகள் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் செல்ல டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு பஸ் கண்டக்டர், தெக்கலூரில் பஸ் நிற்காது என்று கூறி, டிக்கெட் கொடுக்க மறுத்துள்ளார்.
அத்துடன், அவர்களை அனுப்பர்பாளையத்திலேயே அவர் இறக்கிவிட்டுள்ளார். உடனே இதுகுறித்து, செல்போன் மூலம் தெக்கலூரில் உள்ள தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவர்கள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து தெக்கலூர் பகுதி பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தெக்கலூருக்கு செல்லும் சர்வீஸ் சாலைக்கு சற்று முன்பாக திரண்டனர்.
3 பஸ்கள் சிறைபிடிப்பு
அப்போது அங்கு வந்த தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து அந்த வழியாக திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற ஒரு தனியார் பஸ், கோவையில் இருந்து அந்தியூர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஆகிய 2 பஸ்களை அவர்கள் சிறை பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களை சமரசப்படுத்தினார்கள்.
அத்துடன், அந்த பஸ்சின் உரிமையாளர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களையும் கூறினார்கள். அப்போது, இனி முறையாக தெக்கலூர் பஸ்நிறுத்தத்தில் நின்று பயணிகள் ஏற்றி, இறக்கப்படுவார்கள் என்று அவர்கள் உறுதி அளித்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு டவுன் பஸ்
இதேபோல் அவினாசி அருகே கந்தம்பாளையம், குள்ளேகவுண்டம்பாளையம், மொண்டிநாதம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் வழியாக திருப்பூரில் இருந்து சமத்துவபுரம் வரை அரசு டவுன் பஸ் ஒன்று சென்று வருகிறது. இந்த கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அந்த அரசு டவுன் பஸ்சில் தான் சென்றுவருகிறார்கள்.
ஆனால் பல நேரங்களில் இந்த பஸ் குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்வதில்லை. மேலும் சரியான நேரத்துக்கு பஸ் வராததால், பள்ளி மாணவ-மாணவிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். அதுபோல் தொழிலாளர்களும் குறித்த நேரத்துக்கு வேலைக்கு செல்லமுடிவதில்லை.
போராட்டம்
இதுபற்றி பல முறை அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், நேற்று காலை மொண்டி நாதம்பாளையத்துக்கு வந்த அந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி போலீசார் மற்றும் அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உங்கள் பகுதிக்கு சரியான நேரத்துக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைதொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் நேற்று காலை 8.30 மணி முதல் காலை 9.30 மணி வரை ஒரு மணிநேரம் மொண்டிநாதம்பாளையத்தில் இருந்து அவினாசி செல்லும் ரோட்டில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.