767 மாணவர்கள் வெளியேற்றம்: மருத்துவ கவுன்சிலின் முடிவுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

767 மாணவர்களை வெளியேற்றும் மருத்துவ கவுன்சிலின் முடிவுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2017-09-14 22:30 GMT
புதுச்சேரி, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏற்றுக்கொள்ள முடியாது

புதுவையில் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், 3 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் 2016-17 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் 767 இடங்கள் நிரப்பப்பட்டு முதலாம் ஆண்டு படித்து நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தேர்வு எழுதி உள்ளனர். இந்தநிலையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான குழு தலைவர் சித்ரா வெங்கட்ராமன், கட்டண நிர்ணயக்குழு தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோரின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 7-ந்தேதி கல்லூரியிலிருந்து மாணவர்களை நீக்கியதுடன் 2 வார காலத்திற்குள் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓராண்டுக்கான படிப்பை முடித்து 2-ம் ஆண்டு செல்லக்கூடிய நிலையில் மருத்துவ கவுன்சில் உத்தரவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. புதுச்சேரியில் 2016-17ல் நீட் விலக்கு என்ற உத்தரவானது அரசு ஒதுக்கீடானாலும், நிர்வாக ஒதுக்கீடானாலும் விலக்கு ஒன்றுதான். இதுகுறித்த விஷயத்தில் மாநில அரசு தனக்கு சம்பந்தம் இல்லை என்று கூறுவது சரியல்ல.

கைவிட வேண்டும்

முதல்-அமைச்சர் அனைத்து கல்லூரி நிர்வாகத்தையும் அழைத்துப்பேசியும், மத்திய சுகாதாரத்துறையை அணுகியும், இந்திய மருத்துவ கவுன்சிலை உடனடியாக தொடர்புகொண்டும் மாணவர்களின் படிப்பினை தொடர முயற்சி எடுக்கவேண்டும். மாணவர்களின் நலனைப்பற்றி கருதாமல் அறிவித்துள்ள மருத்துவ கவுன்சிலின் உத்தரவும் ஏற்புடையதல்ல.

767 மாணவர்களின் கனவை சீரழிக்கின்ற போக்கினை மருத்துவ கவுன்சில் கைவிட வேண்டும். மாநில அரசும், நிர்வாகமும் சேர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலிடம் முறையீடு செய்து உரிய தீர்வு காணவும், மாணவர்கள் 2-ம் ஆண்டு படிப்பை தொடருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நாரா.கலைநாதன் கூறியுள்ளார்.

உள்நோக்கம் கொண்டது

கம்யூனிஸ்டு எம்.எல். செயலாளர் சோ.பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், புதுச்சேரி, தமிழகத்தில் நீட் நுழைவு தேர்வு போராட்டங்கள் உச்சகட்டத்தில் இருக்கும்போது மத்திய பாரதீய ஜனதா அரசு எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது. குற்றம் இழைத்தவர்களை தண்டித்திட எந்த பரிந்துரையும் செய்யாமல் உண்மை குற்றவாளிகளை மருத்துவ கவுன்சில் தப்ப விட்டிருப்பது மோசடியாகும். மாணவர்களை மட்டும் வெளியேற்றி இருப்பது ஒருதலைபட்சமானது என்று கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்