ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் 1,300 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,300 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-14 23:00 GMT
திருவண்ணாமலை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 7-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் மதுரை ஐகோர்ட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இருப்பினும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் திருவண்ணாமலையிலும் நடைபெற்று வருகிறது.

குறிப்பிட்ட சில சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாததால் நேற்று அரசு பணிகள் ஓரளவுக்கு நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர். பின்னர் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்திலேயே சமைத்து சாப்பிட்டனர்.

இந்த நிலையில் நேற்றும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் தொடர்ந்து 2-வது நாளாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அருகே சமையல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று அங்கு சமையல் செய்ய போலீசார் தடை விதித்ததால் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்திலேயே சமைத்தனர். போராட்டத்தின் போது கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பாடல்கள் பாடினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 1,300 பேரை போலீசார் கைது செய்தனர். ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்