புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2017-09-14 22:45 GMT
கிருஷ்ணகிரி,

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து, 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பூதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 7-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து 8-ந் தேதி ஆர்ப்பாட்டமும், 11-ந் தேதி தர்ணா போராட்டமும் நடந்தது. அதன் தொடர்ச்சியாக 12-ந் தேதி சாலை மறியல் நடந்தது. நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

காத்திருப்பு போராட்டம்

தொடர்ந்து நேற்றும் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் தியோடர்ராபின்சன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் நாராயணன், நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்பட ஆயிரக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதை முன்னிட்டு அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்