வேளாண்மை அலுவலகத்தில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாமக்கல் அருகே வேளாண்மை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-09-14 23:00 GMT
மோகனூர்,

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள லத்துவாடி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் வேளாண்மை அறிவியல் நிலைய கட்டிடமும் உள்ளது. இந்த அலுவலக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வேளாண்மை அறிவியல் நிலைய எப்.எம். ரேடியோ அலுவலகமும், வேளாண் இடுபொருட்கள் விற்பனை நிலையமும் செயல்பட்டு வந்தது.

சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை வாங்குவதற்கு இங்கு வந்து செல்வார்கள். இதேபோல கால்நடை மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளும் இந்த அலுவலக வளாகத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்து

இந்த நிலையில் நேற்று காலை பணியாளர்கள் வழக்கம்போல் அலுவலகத்துக்கு வந்தபோது அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டித்தில் இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள் இதுகுறித்து உடனடியாக நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர்.

இதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டாவது மாடியில் இருந்த கண்ணாடிகளை உடைத்து புகையினை வெளியேற்றி, பின்னர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

காரணம் என்ன?

இரண்டாவது மாடி கட்டிடத்தில் வேளாண்மை அறிவியல் நிலைய எப்.எம். ரேடியோ அலுவலகம் அல்லது வேளாண் இடுபொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட பிறகே சேத மதிப்பு தெரியவரும் என பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 

மேலும் செய்திகள்