தேனியில் தொடரும் போராட்டம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,136 பேர் கைது

தேனியில் அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள்போராட் டம் தொடர்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்திய 1,136 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-14 23:00 GMT
தேனி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக் கால தடை விதித்துள்ள போதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்திலும் இந்த போராட்டம் தொடர்கிறது.

கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களை தொடர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 674 பேரை போலீசார் கைது செய்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க கோஷங் கள் எழுப்பப்பட்டன. நேற்று முன்தினம் போராட்டத்தின் போது நிழற்பந்தல் அமைத்து அதற்கு கீழ் அமர்ந்து இருந்தனர். இந்த நிழற்பந்தலை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், நேற்று கொளுத்தும் வெயலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,136 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், 866 பேர் பெண்கள் ஆவார்கள். போலீஸ் வேன்கள் மற்றும் தனியார் மினிபஸ்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏற்றி சென்று தேனியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

போராட்டம் நடந்த இடத்தில் சமையல் செய்து சாப்பிட பாத்திரங்கள், பொருட்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. ஆனால், சமையல் செய்யவில்லை. நேற்று முன்தினம் போராட்டத்தின் போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் பலர் போலீசார் கைது செய்வதை அறிந்து, கைதாக விருப்பம் இல்லை என்று கலைந்து சென்றனர். ஆனால், நேற்று கூட்டம் கலைந்து செல்லாமல் தடுக்க ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் போராட்டத்தில் அமர்ந்து இருந்தவர்களை சுற்றி அரணாக நின்றனர். தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்தனர். 

மேலும் செய்திகள்