செங்கோட்டை அருகே பரிதாபம்: பாம்பு அரணை கடித்து பிளஸ்–1 மாணவி சாவு; தாய் கவலைக்கிடம்
செங்கோட்டை அருகே பாம்பு அரணை கடித்ததில் பிளஸ்–1 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்கோட்டை,
செங்கோட்டை அருகே பாம்பு அரணை கடித்ததில் பிளஸ்–1 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிளஸ்–1 மாணவிநெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி முத்துமாரி(வயது 35). இவர்களுடைய மகள் கிருஷ்ணவேணி(17). இவர், செங்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு முத்துமாரியும், கிருஷ்ணவேணியும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பாம்பு அரணை, கிருஷ்ணவேணியை கடித்தது. தூக்க கலக்கத்தில் இருந்த அவர், ஏதாவது எறும்பு கடித்து இருக்கும் என்று நினைத்து புரண்டு படுத்து கொண்டார். பின்னர் அந்த பாம்பு அரணை, கிருஷ்ணவேணி அருகே தூங்கிக்கொண்டிருந்த முத்துமாரியையும் கடித்தது. திடுக்கிட்டு கண் விழித்த அவர் உடனடியாக எழுந்து பார்த்தார்.
பரிதாப சாவுஅப்போது ஒரு பாம்பு அரணை அங்கிருந்து வேகமாக ஓடியது. உடனே அவர் தனது மகளை எழுப்பினார். ஆனால் அவர் பாம்பு அரணை கடித்ததில் மயங்கி கிடந்தார். இதில் பதறிப்போன முத்துமாரி, ஓடிச்சென்று தன்னுடைய உறவினர்களிடம் நடந்த விவரத்தை கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் முத்துமாரியையும், கிருஷ்ணவேணியையும் அருகே இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு நேற்று இரவு கிருஷ்ணவேணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய் கவலைக்கிடம்உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள முத்துமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புளியரை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுரேஷ்குமார், சப்– இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாம்பு அரணை கடித்ததில் பிளஸ்–1 மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.