கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்

நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நேற்று 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-14 23:00 GMT
நாகர்கோவில்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 7–ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் அரசு பணிகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆசிரியர்களும் பணிக்கு செல்லாததால் மாணவ–மாணவிகள் அவதிப்பட்டு இருக்கிறார்கள்.

ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்ட பிறகும் பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் அழைக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

காத்திருப்பு போராட்டம்

குமரி மாவட்டத்தில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்            நடத்தி  வருகிறார் கள். நேற்று முன்தினம் மதியம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் போலீசார் திடீரென கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் காத்திருப்பு போராட்டம் 2–வது நாளாக நேற்றும் நீடித்தது. ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதற்காக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் முன் சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அனைவரும் தரையில் அமர்ந்தபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்