நெல்லையில் வீடு புகுந்து பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

நெல்லையில், வீடு புகுந்து பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-09-14 06:02 GMT
நெல்லை,

நெல்லையில், வீடு புகுந்து பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யா நகரை சேர்ந்தவர் வேலாயுதம், பட்டய கணக்காளர். இவருடைய மனைவி சரவணலதா (வயது 43). நேற்று மாலை இவர் வீட்டில் இருந்து கணினி முன்பு அமர்ந்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் கதவு திறந்து கிடந்த அந்த வீட்டிற்குள் நுழைந்தான். வீட்டிற்குள் இருந்த சரவணலதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் எடை கொண்ட 2 தங்க சங்கிலிகளை பறித்தான். பின்னர் அங்கிருந்து வேகமாக வெளியே தப்பி ஓடினான்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பகுதி மக்கள், தப்பி ஓடிய கொள்ளையனை துரத்திச் சென்றனர். ஆனால் அந்த கொள்ளையன் அங்குள்ள தண்டவாளத்தை கடந்து, அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வேகமாக தப்பிச் சென்று விட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளையன் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையன் தப்பி ஓடிய காட்சி பதிவாகி இருப்பதை கண்டனர். இதையடுத்து கொள்ளையனின் உருவ படங்களை சேகரித்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கொள்ளையனின் உருவ படத்தைக் கொண்டு, அவனை பிடிக்க போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொள்ளையன் வீடு புகுந்து துணிகரமாக நகையை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்